கிராம ஊராட்சி சேவை மையம்
↠ கிராம மக்கள், அனைத்து அரசு சேவைகளுக்கும் விண்ணப்பித்தல், வரி செலுத்துதல் உட்பட பணிகளை, தங்கள் கிராமங்களிலேயே மேற்கொள்ளும் வகையில், கிராம சேவை மையங்கள், அரசால் துவக்கப்பட உள்ளது. மையத்திற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
↠ கிராமப்புற மக்கள், வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற, அருகிலுள்ள நகரப்பகுதிக்கு சென்று, விண்ணப்பங்களை வாங்கி, சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும், மின்கட்டணம் உட்பட கட்டணங்களை செலுத்தவும், கிராமங்களில் வசதியில்லை. தற்போது, தாலுகா அலுவலகங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், இ-சேவை மையம் என்ற பெயரில், ஆன்-லைனில், திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தியுள்ளது.
↠ இம்மையங்களில், இருப்பிடச்சான்று, வருவாய் சான்று, ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தல் மற்றும் விவசாயிகளுக்கு, கம்ப்யூட்டர் சிட்டா, பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
↠ இந்நிலையில், இச்சேவையை விரிவுபடுத்தும் வகையில், அனைத்து கிராமங்களிலும், கிராம சேவை மையம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த மையத்தில், அரசுத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான சேவைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.மேலும், ரயில் முன்பதிவு போன்ற சேவைகளையும், மக்களுக்கு வழங்க, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
↠ ஊராட்சிக்கு ஒரு கிராம சேவை மையம் என்ற அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தலா, 14 லட்ச ரூபாய், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி துறை மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கட்டடங்கள் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளன.
↠ சுயஉதவிக்குழு கருத்தரங்க கூடம்:ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: ஊராட்சி கிராம சேவை மையத்தில், மக்களுக்கான பல்வேறு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, கம்ப்யூட்டர் உட்பட உபகரணங்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினரும், இக்கட்டடத்தை, கூட்டம் நடத்துதல் உட்பட பணிகளுக்கு, பயன்படுத்தி கொள்ளலாம்.
. | . | |