ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் கோவில்
மாரியம்மன் ஒரு இந்து சமய கடவுள் ஆவார். பார்வதியின் அவதாரமான இவர் தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும்.
✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று .
✤ இக்கோவிலானது பெருமாள் கோவில் குளத்தின் அருகே அமைந்துள்ளது .
✤ மாரியம்மன் கோவில் தீமிதி மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
✤ மாரியம்மன் கோவில் தீமிதி அன்று குருங்குளமே மக்கள் வெள்ளத்தில் நிறைந்து இருக்கும் .
✤ கார்த்திகை அன்றும் இங்கு மிக சிறப்பாக நடைபெறும்.
✤ விளக்கு பூஜையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
பூக்குழித் திருவிழா
பூக்குழித் திருவிழா என்பது, தமிழகத்தின் பெரும்பாலான மாரியம்மன் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு திருவிழா ஆகும். இத்திருவிழா, பூமிதித் திருவிழா என்றும் அழைக்கப்படும்.
பூக்குழி அமைப்பு
சற்று குழிவான ஒரு நிலப்பரப்பில் மரத்துண்டங்களை எரித்து, கங்கினை உருவாக்குவர். விரதம் மேற்கொண்ட பக்தர்கள், இந்த கனன்றுகொண்டிருக்கும் 'கங்குப் படுகை'யின் மேல் வெறுங்காலில் நடந்து செல்வர். பக்தியின் காரணமாக நெருப்பு, பூ (மலர்) என கருதப்பட்டு பூக்குழித் திருவிழா என சொல்லப்படுகிறது.
திருவிழா அன்று காலையில் குண்டத்தில் மரக்கட்டைகளை குவிப்பர். இதில் வேப்பமரத்தின் கட்டைகள் பெரும்பான்மையாகும். ஆலயத்தின் முக்கியக் கருவறையிலிருந்து எரியும் கற்பூரம் கொண்டு வரப்பட்டு, அந்த நெருப்பினால் மரக்கட்டைகள் பற்ற வைக்கப்படும். பக்தர்கள் கொண்டு வரும் நல்லெண்ணெயும் நெய்யும் கூடுதல் எரிபொருளாக, எரியும் மரக்கட்டைகளின் மீது ஊற்றப்படும். மரக்கட்டைகள் நன்கு எரிந்து துண்டங்களான பிறகு, அந்த கங்குகள் பரவிவிடப்பட்டு ஒரு படுகை போல உருவாக்கப்படும்.
விரதம் மேற்கொண்ட பக்தர்கள், வீதிவலம் வந்து இறுதியில் ஒருவர் பின் ஒருவராக அந்தக் கங்குப்படுகையின் மீது நடப்பர். பொதுவாக அம்மன் வீற்றிருக்கும் சப்பரமும் வீதிவலம் வந்து குண்டத்தின் முன் நிறுத்தப்படும்.