அய்யனார் கோவில்
✤ இக்கோவில் குருங்குளம் கிராமத்தில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று .
✤ இக்கோவிலானது அக்ரஹாரம் தெருவில் தாமரை குளத்தின் அருகே அமைந்துள்ளது.
ஐயனார் என்பவர் தமிழ் நாட்டுப்புறக் காவல் தெய்வம் ஆவார். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வம் ஆக வழிபடுகின்றனர்.
தோற்றம்
இவர் இன்றைய இந்து மதமாக அறியப்படும் ஐயப்பன் ஆவார். பழந்தமிழர் சமயக் கடவுள் ஆவார். இவர் கம்பீரமான தோற்றத்துடன் கையில் செண்டாயுதம் அரிவாள் வைத்திருப்பார். பெரிய பெரிய குதிரை சிலைகள் அய்யனார் கோவில்களில் இருக்கும். பொதுவாக வெட்டவெளியில், காட்டுக்குள் கோவில் அமைதிருக்கும்.
வடிவம்
ஐயனார் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். இளைஞரைப் போன்றவர். கிரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடது காதில் குண்டலமும் அணிந்திருப்பார் மற்றும் கடவுளுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலது கையில் தண்டம் அல்லது செண்டு வைத்திருப்பார். இடது கையை இடது காலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் மீது வைத்துக்கொண்டு வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.
உணவு
ஐயனார் சைவ உணவான சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
கோயில்
ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க் கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் அல்லது மடைகளுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் அல்லது காட்டிற்கு உள்ளே கோயில் இருக்கும். கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே முருகனும் இருப்பர்.
கோயில் பூசாரி
பொதுவாக தமிழக கிராம காவல் தெய்வம் கோவில்களில் பூணூல் அணிந்த பிராமணர் பூஜை செய்வதில்லை, அந்தந்த கிராமங்களில் பரம்பரை பூசாரிகள் இருப்பார்கள்.
திருவிழாக்கள்
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு சிவராத்திரித் திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து திருவிழா அன்று மக்கள் அனைவரும் அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
பிரசாதம்
ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமான நீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.
காவலுக்குக் கருப்பர்
ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாள் அல்லது செண்டாயுதம் ஏந்தி வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.